செய்திகள்

தஞ்சையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வாலிபர் மரணம்: ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

Published On 2017-05-25 15:15 GMT   |   Update On 2017-05-25 15:15 GMT
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வாலிபர் இறந்ததால் உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மகர் நோம்புச்சாவடி கிருஷ்ணன் கோவில் 1-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (33). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. தற்போது சத்யா 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

சிவகுமாருக்கு குடல் இறக்கம் காரணமாக அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் அறுவை சிகிச்சைக்காக மகர்நோம்புச் சாவடியில் உள்ள சுடர் மருத்துவமனையில் கடந்த 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிவக்குமார் இறந்தார்.

இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று காலை ஆஸ்பத்திரி முன் திரண்டனர். தவறான சிகிச்சை மற்றும் டாக்டர்களின் அலட்சிய போக்கு காரணமாக தான் சிவக்குமார் இறந்துள்ளார். எனவே டாக்டர்களை கைது செய்ய வேண்டும். இனி இது போல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இறந்த சிவகுமார் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது.இது பற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் அங்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சிவகுமார் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை நடத்தினால் தான் தெரியவரும் என கூறி உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்க ரெங்க சாமி எம்.எல்.ஏ. வந்தார்.அவரிடமும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி முறையிட்டனர்.

சிவக்குமாரின் தாய் வசந்தி கடந்த 3 வருடத்திற்கு முன் சுடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கும் வழியில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News