செய்திகள்

புதுவை சட்டசபையில் சரக்கு சேவை வரி சட்டம் நிறைவேற்றம்

Published On 2017-05-17 10:50 GMT   |   Update On 2017-05-17 10:50 GMT
புதுவை சட்டசபையில் சரக்கு சேவை வரி சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிமுகப்படுத்தி சபையில் முன்னிலைப்படுத்தினார்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசு சரக்கு சேவை வரி சட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் சட்டசபையில் சரக்கு சேவை வரி சட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

இதன்படி புதுவை சட்டசபையில் சரக்கு சேவை வரி சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிமுகப்படுத்தி சபையில் முன்னிலைப்படுத்தினார்.

இதன் மீது சபையில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நாடு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் ஒரேவிதமான வரியை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக சரக்கு சேவை வரி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 5 முதல் 40 சதவீதம் வரை 5விதமான வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி தலைமையில் வரியை அமல்படுத்த அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் புதுவையும் இடம்பெற்றுள்ளது.

சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக புதுவை இருப்பதால் மாநிலமாக கருத வேண்டும் என்று குரல் கொடுத்தோம். இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. முதன் முதலாக ஒரு படி நாம் உயர்ந்துள்ளோம்.

இந்த வரியினால் நுகர்வோர் மாநிலங்களுக்கு பாதிப்பா? உற்பத்தி மாநிலங்களுக்கு பாதிப்பா? என பெரிய விவாதம் நடந்து வருகிறது. இருப்பினும் நடைமுறைப்படுத்தும் போதுதான் அதில் ஏற்படும் சாதக, பாதகங்கள் தெரியும்.

அப்படி பாதகம் ஏற்படும்போது அதனை தீர்வு காண்போம். நமது மாநிலத்தில் சரக்கு சேவை வரிக்காக வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். 80 சதவீத வியாபாரிகள் சரக்கு சேவை வரிக்கு மாறிவிட்டனர்.

இதனால் ஏற்படும் இழப்பீடை 6 மாதத்திற்கு ஒரு முறை தருவதாக மத்திய அரசு கூறியது. 2 மாதத்திற்கு ஒருமுறை இழப்பீடு வழங்க கோரியுள்ளோம். மத்திய அரசின் வரி விதிப்பை நாம் எதிர்க்கும் நிலையில் இல்லை, ஏற்கும் நிலையில் உள்ளோம்.

அதே நேரத்தில் மாநிலத்தின் வருவாயை பெருக்க நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதிய வரி விதிப்பால் தொழிற்சாலைகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுவையை தேடி வரவேண்டிய தொழிற்சாலைகள் தேடி வரும். எனவே, சட்டத்தை உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்.

Tags:    

Similar News