செய்திகள்

புதுவையில் 1-ந்தேதி முதல் கட்டாய ‘ஹெல்மெட்’ - மீறுபவர்களுக்கு ‘ஸ்பாட் பைன்’

Published On 2017-04-28 07:07 GMT   |   Update On 2017-04-28 07:07 GMT
புதுவையில் திட்டமிட்டபடி வருகிற 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அமலில் உள்ளது. ஆனால், புதுவையில் இதுவரை கட்டாய ஹெல்மெட் திட்டம் இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

இதை தீவிரமாக அமல்படுத்தும்படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி புதுவையிலும் மே மாதம் 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்து இருந்தார்.

இதற்கு சில கட்சிகளும், சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனவே, கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், திட்டமிட்டபடி வருகிற 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் அதிக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. புதுவையில் கடந்த ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 230 பேர் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 56 பேர் உயிர் இழந்துள்ளனர்.

எனவேதான் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1-ந் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதை வலியுறுத்தி 2 மாதமாக போலீசாரும், சமூக அமைப்பினரும் சேர்ந்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் வருகிற 1-ந் தேதியில் இருந்து கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும். பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது. அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.



1-ந் தேதி முதல் அனைத்து முக்கிய இடங்களிலும் போலீசார் நின்று வாகன சோதனை நடத்துவார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 177-வது பிரிவின்படி வழக்கு பதிவு செய்து உடனடியாக ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும்.

முதல் தடவை அவர்கள் பிடிபட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அவர்கள் பெயர் விவரங்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்து 2-வது முறையாக அவர்கள் பிடிபட்டால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.

அதற்கு பிறகும் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோர்ட்டு, வழக்கு என பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியது வரும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

Tags:    

Similar News