செய்திகள்

கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை

Published On 2017-04-20 10:25 GMT   |   Update On 2017-04-20 10:26 GMT
செங்கோட்டை பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்களை விவசாயிகள் அகற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செங்கோட்டை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. மேலும் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடும் வறட்சியால் வறண்டு காய்ந்து விளையாட்டு மைதானமாக காணப்படுகிறது.

இந்நிலையில் செங்கோட்டை, இலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எளிதில் காய்ந்து விடாதவையாக கருதப்படும் தென்னை, பனை மரங்கள் கூட கடும் வெப்பத்தாலும், வறண்ட வானிலை தொடர்வதாலும் இதுவரை பலன் தந்த தென்னைகள் காய்ந்து காணப்படுவதுடன் வெறும் கட்டையாக கொண்டை முறிந்து விவசாய நிலங்களில் காட்சி அளிக்கின்றன.

வறட்சியின் கொடுமையால் வேறு வழியின்றி விவசாயிகள் தோப்பில் உள்ள தென்னைகளை வெட்டி அகற்றி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வருகிற ஆண்டில் தென்னந்தோப்புகளை அழித்து வறட்சியை தாங்கும் பயிர்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஊடுபயிர்களை நடவு செய்ய தொடங்க போவதாகவும் செங்கோட்டை பகுதி விவசாயிகள் கூறினர்.

மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:-

எனது தோட்டத்தில் 40 தென்னை மரங்கள் இருந்தன. 40 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லை. இதனால் தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. காலப்போக்கில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் வேர் முதல் உச்சி வரை தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன.

பொதுவாக தென்னை மரங்கள் நீர் இல்லாவிட்டாலும் எளிதில் காயாது. ஆனால் தற்போது நிலவும் கடும் வறட்சியால் தென்னைகள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. எனவே 35 ஆண்டு காலம் வளர்த்த தென்னை மரங்களை முற்றிலும் அகற்ற முடிவு செய்துள்ளேன். மர அறுப்பு மில்லுக்கு விலைபேசி அவற்றை விற்று விட்டேன். வரும் காலங்களில் மழை பொழிவு, நீரோட்டத்தை கருத்தில் கொண்டு பயிர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News