செய்திகள்

முதல்-அமைச்சர், 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2017-03-28 03:24 GMT   |   Update On 2017-03-28 03:24 GMT
சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை:

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகனும், அ.தி.மு.க. பிரமுகருமான ஆணழகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்தபின்பு ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரிசங்கர், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆலோசனை மற்றும் உத்தரவின்பேரில் தமிழக அரசு வழிநடத்தப்படும்” என குறிப்பிட்டார். இதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, 28-ந்தேதி அ.தி.மு.க. செய்திதொடர்பாளர் கவுரிசங்கரின் பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறியிருந்தனர்.

அவர்களின் இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188-வது ஷரத்துக்கும், அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது. இந்த செயல்களுக்கு முதல்-அமைச்சரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. சசிகலா, சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஆவார். ஆனால் அவரது ஆலோசனைப்படி அரசும், முதல்-அமைச்சரும் செயல்படுவது தெரியவருகிறது. இதற்கு அமைச்சர்கள் தூதுவர்களாக உள்ளனர். அரசியலமைப்புச்சட்டப்படிதான் அரசு இயங்க வேண்டும்.

எனவே முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களின் எம்.எல்.ஏ. பதவியில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கும், சட்டசபை செயலாளருக்கும் கடந்த 13, 16-ந்தேதிகளில் மனு அனுப்பினேன். அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே கோர்ட்டு தலையிட்டு எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்த மனுவை கவர்னருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Similar News