செய்திகள்
பழங்கால கல்வெட்டில் உள்ள ஜல்லிக்கட்டு காளை

தமிழர்களின் வீரவிளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்ததற்கான ஆதாரம்

Published On 2017-01-10 05:56 GMT   |   Update On 2017-01-10 05:56 GMT
தமிழகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்களை திரட்டி, சேலம் பாராமகால் நாணய சங்க தலைவர் சுல்தான் தலைமையில் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
சேலம்:

சேலம் பாராமகால் நாணய சங்க தலைவர் சுல்தான் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சம்பத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்களை திரட்டி உள்ளோம். குறிப்பாக 700 ஆண்டுக்கு முன்பு இருந்த விஜயநகர பேரரசு காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் வெளியிடப்பட்ட நாணயங்கள், 1659-ம் ஆண்டு முதல் 1682-ம் ஆண்டுவரை உள்ள நாணயங்கள், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு குறித்த செப்புத்தகடுகள், ஓலைச்சுவடி போன்ற ஆதாரங்கள் உள்ளன.

இதுதவிர ஜல்லிக்கட்டு நடந்ததை எடுத்துரைக்கும் வகையில் தபால் தலைகளும் வெளியிடப்பட்டன. எனவே, இதுபோன்ற பல்வேறு ஆதாரங்கள் இருப்பதால், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Similar News