செய்திகள்

திண்டுக்கல்லில் பாலத்தில் கிடந்த 100 ரூபாய் கட்டுகள்

Published On 2016-11-27 11:33 GMT   |   Update On 2016-11-27 11:33 GMT
திண்டுக்கல் பாலத்தில் கிடந்த 100 ரூபாய் கட்டுகள் மோசடிகும்பல் தவறவிட்டவைகளா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு ஒரு பை கிடந்தது. அப்போது அவ்வழியே காரில் வந்த சென்னையை சேர்ந்த அண்ணாதொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன், திண்டுக்கல் பாண்டியன்நகரை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயராஜ், மோட்டார் சைக்கிளில் வந்த ரெட்டியார்பட்டி மார்க் ஆகியோர் அதனை கண்டனர்.

அப்பையை திறந்து பார்த்தபோது அதில் 100 ரூபாய் கட்டுகள் 9 இருந்தது. ஒவ்வொன்றிலும் ரூ.10 ஆயிரம் வீதம் இருந்தது. அவற்றை அவர்கள் திண்டுக்கல் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

நேர்மையாக நடந்து கொண்ட அவர்களை போலீசார் பாராட்டினர். அந்த பணம் யாருடையது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ஒரு சிலர் கருப்பு பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

அதுபோன்று பெரும்புள்ளிகளிடம் பெறப்பட்ட கருப்புபணத்தை மாற்றி சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News