இந்தியா

பாராளுமன்ற தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி

Published On 2024-05-23 02:59 GMT   |   Update On 2024-05-23 02:59 GMT
  • 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தலில் 489 இடங்களுக்கு 1,874 பேர் போட்டியிட்டனர்.
  • முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1996 தேர்தலின்போது 543 இடங்களுக்கு 13,952 பேர் போட்டியிட்டனர்.

புதுடெல்லி:

2024 பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 6-ம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நிலையில் 7-ம் கட்ட தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

7-ம் கட்ட தேர்தலில் அந்தமான் நிக்கோபார் மற்றும் 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த 57 தொகுதிகளில் மொத்தம் 2,105 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனைக்கு பிறகு 954 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 50 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் இறுதியாக தேர்தல் களத்தில் 904 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.

அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 328 பேர் போட்டியிடுகிறார்கள். இங்கு மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடந்து வரும் மக்களவை தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், இது 1996 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கை எனவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தலில் 489 இடங்களுக்கு 1,874 பேர் போட்டியிட்டனர். 1971 தேர்தலில் இந்த எண்ணிக்கை 2,784 ஆக உயர்ந்தது.

1977-ல் நடந்த தேர்தலில் அது 2,439 ஆக குறைந்த நிலையில், 1980 பாராளுமன்ற தேர்தலில் 4,629 என்ற அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியது.

1984-85-ல், 8-வது மக்களவை தேர்தலில் 5,492 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 1989-ம் ஆண்டு நடந்த 9-வது பொதுத்தேர்தலில் 6,160 வேட்பாளர்களும், 1991-92-ம் ஆண்டு 10-வது பொதுத்தேர்தலில் 543 இடங்களுக்கு 8,668 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1996 தேர்தலின்போது 543 இடங்களுக்கு 13,952 பேர் போட்டியிட்டனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 1,999 பொதுத் தேர்தலில் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் குறைவாக இருந்தது. அந்த தேர்தலில் 4,648 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதன் பின்னர் 2004 தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை மீண்டும் 5,000-ஐத் தாண்டியது. அப்போதைய தேர்தலில் மொத்தம் 5,435 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

2004 தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2009 பொதுத்தேர்தலில் 8,070 வேட்பாளர்களும் 2014 பொதுத்தேர்தலில் 8,251 வேட்பாளர்களும் போட்டியிட்ட நிலையில், 2019 தேர்தலில் அந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. அந்த தேர்தலில் மொத்தம் 8,039 பேர் போட்டியிட்டனர்.

தற்போதைய தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி 1996 தேர்தலுக்கு பிறகு தற்போது தான் அதிகபட்ச வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News