இந்தியா

மாநிலங்களவையில் கேள்விக் கணை தொடுத்த கமல் ஹாசன் - பளிச் பதில் கொடுத்த நிதின் கட்கரி

Published On 2025-12-19 13:23 IST   |   Update On 2025-12-19 13:23:00 IST
  • இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
  • நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.

கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

கமல் ஹாசனின் கேள்விகள்:

1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?

2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?

நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News