முடிந்தது குளிர்கால கூட்டத்தொடர்.. பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!
- இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
- காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.
இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.
மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.
மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.
பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது.