தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப்பகுதி எதிரொலி- தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Published On 2024-05-23 01:22 GMT   |   Update On 2024-05-23 01:22 GMT
  • காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்கிறது.
  • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ந் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து நேற்று தென்மேற்கு மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவானது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து செல்லும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (24-ந் தேதி) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ந் தேதி மாலை நிலவும்.

இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் 24-ந் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News