செய்திகள்
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் தகுதி

கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் தகுதி

Published On 2021-11-14 06:40 GMT   |   Update On 2021-11-14 06:40 GMT
22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை கத்தார் பெற்றுள்ளது.

பாரீஸ்:

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது உலகக்கோப்பை கால்பந்து போட்டியாகும்.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி குரேஷியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை கத்தார் பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும்.

கத்தாரில் அப்போது கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் இந்த போட்டி நவம்பர், டிசம்பரில் நடத்தப்படுகிறது. நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடும். மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் மூலமே பங்கேற்க முடியும்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, டென்மார்க் அணிகள் கடந்த மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து பிரேசில், தென் அமெரிக்க கண்டத்தின் முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 15-வது முறையாகவும், பெல்ஜியம் 13-வது முறையாகவும் உலகக்கோப்பையில் விளையாடுகின்றன.

Tags:    

Similar News