செய்திகள்
தெண்டுல்கர், ஜாகீர்கான், யுவராஜ்சிங் ஆகியோர் செல்பி எடுத்துக் கொண்ட காட்சி.

உலக கோப்பையை வென்ற தினம் - தெண்டுல்கர், ஷேவாக் நெகிழ்ச்சி

Published On 2019-04-03 05:26 GMT   |   Update On 2019-04-03 07:33 GMT
உலக கோப்பையை வென்ற தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். #WorldCupWinningDay
மும்பை:

2011-ம் ஆண்டு நடந்த 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மகுடம் சூடியது. இதன் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஏப்ரல் 2-ந்தேதி நடந்தது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து வரலாறு படைத்தது. அப்போது இந்திய கேப்டனாக இருந்த டோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை தித்திப்புடன் நிறைவு செய்தார். நேற்று, இந்த உலக கோப்பையை வென்ற தினம் என்பதால் அதையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

உலக கோப்பையை கைப்பற்றியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய தருணமாகும். அந்த உலக கோப்பையை வென்று 8 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இப்போது அடுத்த உலக கோப்பை போட்டியும் நெருங்கி விட்டது. இந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அணிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அது தான் நமது அணியாக இருக்கும். நீங்கள் இந்திய அணிக்குரிய சீருடையை உற்றுநோக்கினால் அதில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் லோகோவுக்கு மேலே மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். இந்த மூன்று நட்சத்திரங்கள் நாம் மூன்று உலக கோப்பையை வென்றதற்கான (1983, 2011 உலக கோப்பை மற்றும் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை) அடையாளமாகும். அதை இந்த முறை 4 ஆக உயர்த்துவோம். இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு நாம் உற்சாகமூட்டி ஆதரவளிப்போம்.

இவ்வாறு தெண்டுல்கர் அதில் கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பதிவில், ‘8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஏப்ரல் 2-ந்தேதி) உலக கோப்பை கனவை நனவாக்கியதை ஒட்டுமொத்த தேசமே உற்சாகமாக கொண்டாடியது. நீங்கள் (ரசிகர்கள்) எப்படி கொண்டாடினீர்கள்’ என்று அதில் கேட்டுள்ளார்.

தெண்டுல்கர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். யுவராஜ்சிங் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார். ஜாகீர்கான் அந்த அணியின் கிரிக்கெட் நடவடிக்கை இயக்குனராக உள்ளார். அவர்கள் மூன்று பேரும் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ‘2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் (தெண்டுல்கர், 482 ரன்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் (ஜாகீர்கான், 21 விக்கெட்), தொடர்நாயகன் விருது பெற்றவர் (ஆல்- ரவுண்டர் யுவராஜ்சிங், 362 ரன் மற்றும் 15 விக்கெட்) ஆகியோர் நள்ளிரவு 12 மணியை கடந்ததும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அதே நாளில், அதே நகரில் ஒன்று சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அணி 2-வது உலக கோப்பையை வெல்வதற்கு 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் விராட் கோலி 8 ஆண்டுகளிலேயே அந்த ஏக்கத்தை தணிப்பாரா? என்று ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  #WorldCupWinningDay

Tags:    

Similar News