செய்திகள்

விராட் கோலியின் 40-வது சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2019-03-05 07:45 GMT   |   Update On 2019-03-05 11:35 GMT
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் 40-வது சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஷ்டோன் டர்னர், ஜேசன் பெரேன்டர்ப் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை.

ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் ‘ஸ்லோ’வாக இருந்ததால் 7-வது ஓவரிலேயே சுழற்பந்தை கொண்டு வந்தது ஆஸ்திரேலியா. 9-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 38 ரன்கள் எடுத்திருந்தது.



3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். விராட் கோலி நம்பிக்கையுடன் விளையாட ராயுடும் அவருடன் இணைந்து விளையாட முயற்சி செய்தார். ஆனால் 18 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் இந்தியா 17 ஓவரில் 75 ரன்கள் எடுப்பதற்குள் முன்னணி வீரர்கள் மூன்று பேரை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். விராட் கோலியுடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விஜய் சங்கர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் இந்தியா 20.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. விராட் கோலி அரைசதம் அடித்தார்.

இந்தியாவின் ஸ்கோர் 28.5 ஓவரில் 156 ரன்னாக இருக்கும்போது விஜய் சங்கர் எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார். அவர் 41 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த கேதர் ஜாதவ் 11 ரன்னிலும், டோனி ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் ரன்வேகத்தில் தடங்கல் ஏற்பட்டது.

7-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஜடேஜாவை வைத்துக்கொண்டு விராட் கோலி ரன் அடிக்க தொடங்கினார். இந்தியா 38.4 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. 44-வது ஓவரை கவுல்டர்-நைல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி தனது 40-வது சதத்தை பதிவு செய்தார்.



ஜடேஜா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 48-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 120 பந்தில் 10 பவுண்டரியுடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் குல்தீப் யாதவ் ஆட்டமிழந்தார். இந்தியா 48.1 ஓவரில் 250 ரன்னைத் தொட்டது. அடுத்த பந்தில் பும்ரா க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 9 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News