செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக 7 வயது சிறுவன்

Published On 2018-12-24 08:51 GMT   |   Update On 2018-12-24 08:51 GMT
இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக உள்ளான்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர். அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆர்ச்சி சில்லர் உடல்நிலை காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளான்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என தனது தந்தையிடம் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்க விரும்பிய அவனது தந்தை, இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க ஏற்பாடு செய்தார்.



அதன்படி வருகிற 26-ந்தேதி (நாளைமறுநாள்) மெல்போர்னில் நடைபெற இருக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் சிறுவன் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டுள்ளான். மெல்போர்னில் நேற்று நடந்த ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஆர்ச்சி சில்லர் கலந்து கொண்டான். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சி சில்லர் ஆஸ்திரேலிய அணியின் இணை-கேப்டனாக இருப்பார்.
Tags:    

Similar News