செய்திகள்

உலககோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, குரோஷியா தகுதி

Published On 2017-11-13 08:21 GMT   |   Update On 2017-11-13 08:21 GMT
ரஷியாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலககோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கிரீஸ்:

உலககோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலககோப்பை போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

2018-ம் ஆண்டுக்கான உலககோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-தேதி வரை நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ரஷியா மட்டுமே நேரடியாக விளையாடும். மீதியுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தகுதி பெற முடியும். 27 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தன.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து, குரோஷியா ஆகிய 2 அணிகள் மேலும் தகுதி பெற்றுள்ளன.

கிரீஸ் நாட்டில் நடந்த ஆட்டம் ஒன்றில் குரோஷியா- கிரீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதன்மூலம் குரோஷியா தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சுவிட்சர்லாந்து வீரர்கள்.

இதேபோல சுவிட்சர்லாந்து- வடக்கு அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டமும் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதன்மூலம் சுவிட்சர்லாந்து அணி தொடர்ந்து 4-வது முறையாக உலககோப்பைக்கு தகுதி பெற்றது. ஒட்டுமொத்தத்தில் 11-வது முறையாக விளையாடுகிறது.

உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் விவரம்:-

ரஷியா (போட்டியை நடத்தும் நாடு), பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென்கொரியா, சவுதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜீரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுக்கல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா செனகல், மொராக்கோ, துனிசியா, சுவிட்சர்லாந்து, குரோஷியா.

இன்னும் 4 நாடுகள் தான் தகுதி பெற வேண்டியது உள்ளது.
Tags:    

Similar News