செய்திகள்

500-வது ரஞ்சி போட்டி: டிரா செய்து மோசமான வரலாற்று பதிவை தவிர்த்தது மும்பை

Published On 2017-11-12 15:59 GMT   |   Update On 2017-11-12 15:59 GMT
மும்பையில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் பரோடா அணிக்கு எதிராக டிரா செய்து, 500-வது ரஞ்சி போட்டியில் மோசமான வரலாற்றை தவிர்த்தது மும்பை அணி.
ரஞ்சி டிராபியின் 5-வது சுற்று லீக் ஆட்டங்கள் கடந்த 9-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை- பரோடா அணிகள் மோதின. இந்த போட்டி மும்பைக்கு 500-வது ரஞ்சி போட்டியாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் வெற்றி பெற்று சரித்திர வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்று மும்பை அணி விரும்பியது.

போட்டியில் டாஸ் வென்ற பரோடா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை அணி பரோடாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 171 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பரோடா 9 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



404 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 4 விக்கெட் இழப்பிற்கு 29 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 28 ரன்னுடனும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  கைவசம் 6 விக்கெட்டுக்கள் மிச்சம் இருந்த மும்பை 302 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இன்று 4-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. 6 விக்கெட்டுக்களை வைத்துக் கொண்டு எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை அணி களம் இறங்கியது. ரகானே, சூர்யகுமார் மிகவும் மந்தமாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 125 ரன்னாக இருக்கும்போது ரகானே 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 45 ரன்னில் ஆட்டம் இழந்தாலும் 134 பந்துகளை சந்தித்தார். இன்று இந்த ஜோடி 19.1 ஓவர்களை சந்தித்தது.



அடுத்து சூர்யகுமார் யாதவ் உடன் லாட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் மிகவும் மந்தமாக விளையாடியது. இந்த ஜோடி 75-வது ஓவர் வரை தாக்குப்பிடித்தது. சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சூர்யகுமார் யாதவ் - லாட் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 27 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர். 5-வது மற்றும் 6-வது ஜோடி இன்று 46 ஓவர்கள் தாக்குப்பிடித்தது.

7-வது விக்கெட்டுக்கு லாட் உடன் அபிஷேக் நாயர் ஜோடி சேர்ந்தார். 44 ஓவர்கள் தாக்குப்பிடித்துவிட்டால் டிரா செய்து விடலாம் என லாட் - அபிஷேக் நாயர் ஜோடி நினைத்தது. அபிஷேக் நாயர் ரன்ஏதும் அடிக்காமல் அப்படியே பந்துகளை எதிர்கொண்டார். மறுமனையில் லாட் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்.

அபிஷேக் நாயர் 108 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 18 ஓவர்கள் தாக்குப்பிடித்து பரோடாவின் வெற்றிக்கு செக் வைத்தார் அபிஷேக். அபிஷேக் அவுட்டாகும்போது மும்பை அணி 109.5 ஓவரில் 254 ரன்கள் எடுத்திருந்தது. இவர் லாட் உடன் இணைந்து 34.5 ஓவர்கள் விளையாடினார். மூன்று விக்கெட்டுக்கு 80.5 ஓவர்களை கழித்தனர். அதன்பின் ஆட்டம் முடிய சுமார் 11 ஓவர்களே இருந்தது.



பரோடா 10.5 ஒவர்கள் வீசிய நிலையில் லாட் - குல்கர்னி விக்கெட்டை பிரிக்க முடியவில்லை. இதனால் மும்பை 120.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

500-வது போட்டியில் தோல்வியை சந்தித்து மோசமான வரலாற்றை மும்பை அணி பதிவு செய்யும் என்று நினைக்கையில் பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று மோசமான வரலாற்றை மாற்றிவிட்டனர்.

லாட் 238 பந்துகளை சந்தித்து 71 ரன்களுடனும், குல்கர்னி 31 பந்துகளை சந்தித்து 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Tags:    

Similar News