search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சி டிராபி"

    • அரையிறுதியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
    • டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தமிழ்நாடு தோல்விக்கு முக்கிய காரணம் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு அணி ஏழு வருடத்திற்கு பிறகு ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை அணிக்கெதிராக கடந்த 2-ந்தேதி மும்பையில் அரையிறுதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் மும்பை 378 ரன்கள் குவித்துவிட்டது. 106 ரன்னுக்குள் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய ஷர்துல் தாகூர் சதம் (109), 10-வது வீரராக களம் இறங்கிய தனுஷ் கோட்டியான் (89 நாட்அவுட்) சிறப்பாக விளையாட மும்பை அணி 378 ரன்கள் குவித்து விட்டது.

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2-வது இன்னிங்சிலும் 162 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

    3 நாளில் போட்டி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். நான் எப்போதும் நேரடியாகவே பேசுவேன். முதல் நாள் 9 மணிக்கே (டாஸ் சுண்டப்பட்ட நேரம்) நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என பயிற்சியாளர் குல்கர்னி தெரிவித்திருந்தார்.

    அணி தோல்வியடையும்போது கேப்டன் மற்றும் அணி வீரர்களும் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் குல்கர்னி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு அணியை அரையிறுதி வரை கொண்டு சென்ற கேப்டனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் முற்றிலுமாக கேப்டன் மற்றும் அணியை பஸ்க்கு கீழ் தள்ளி விட்டுள்ளார்" என்றார்.

    • இந்திய அணியில் ரன் குவிக்க திணறியதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்தல்.
    • காயம் காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் அறிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவருக்கு பிசிசிஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துவது உண்டு.

    அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அதிக ரன்கள் அடிக்க முடியாமல் ஃபார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு.

    ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஷ்ரேயாஸ் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை- தமிழ் நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரஞ்சி டிராபி காலிறுதியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    மும்பை- பரோடா இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் விதர்பா- மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலிறுதியில் மத்திய பிரதேசம் ஆந்திராவை வீழ்த்தியிருந்தது. கர்நாடகாவை விதர்பா வீழ்த்தியிருந்தது.

    • தேவ்தத் படிக்கல் சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவிப்பு.
    • தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜெகதீசன் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார்.

    தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் இடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் (151 ரன்) அடித்தார். அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 69.2 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இது கர்நாடகா அணியின் ஸ்கோரை விட 215 ரன் குறைவாகும்.

    தமிழக அணியில் பாபா அபரஜித் அதிகபட்சமாக 48 ரன்னும், என்.ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். கர்நாடகா அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், சசிகுமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    215 ரன்கள் முன்னிலையில் கர்நாடகா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

    • 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.
    • அறிமுக போட்டியிலே சதம் அடித்த நிலையிலும், ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷா. 24 வயதான இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சதம் விளாசினார். ஆனால் 2020-க்கும் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஐந்து போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்தார்.

    உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. ஆறு மாத ஓய்விற்குப் பிறகு தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில்தான் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 185 பந்தில் 159 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னதாக ஒருமுறையும் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்துள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்தாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து பிரித்வி ஷா கூறுகையில் "நான் அதிகப்படியாக எதையும் குறித்து யோசித்து கொண்டிருக்கவில்லை. தற்போதைய நிலையில் இருக்க விரும்புகிறேன். எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நான், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய நோக்கம் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். என்னுடைய பங்களிப்பு மூலம் இந்த சாதனையை அடைய முயற்சி செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக பிரித்வி ஷா முதல்தர போட்டியில் 383 பந்தில் 379 ரன்கள் அடித்துள்ளார். அப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்தார். இதன்மூலம் முதல்தர போட்டியில் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாடு- கர்நாடகா போட்டி நடைபெறுகிறது
    • தமிழ்நாடு ஐந்து போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

    ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

    எலைட் குரூப் "ஜி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.

    • ஐதராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் ரஞ்சி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார்.
    • அதிவேக இரட்டை சதம் மற்றும் அதிவேக முச்சதம் சாதனைகளை முறியடித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி தொடர் நடந்து வருகிறது.

    அதில் ஐதராபாத், அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரர்களாக தன்மய் அகர்வால், கேப்டன் ராகுல் சிங் இறங்கினர். இருவரும் சேர்ந்து அருணாச்சல் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தன்மய் அகர்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 119 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் (உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை சேர்த்து) வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முச்சதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்மய் அகர்வால் படைத்தார்.

    ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 21 சிக்சர், 33 பவுண்டரிகள் விளாசி இருந்தார்.

    21 சிக்சர் அடித்ததன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஏற்கனவே, இஷான் கிஷன் 14 சிக்ஸ் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தன்மய் அகர்வால் உடைத்தார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்தது.

    அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்கள், ஐதராபாத் அணி 527 ரன்கள் எடுத்த நிலையில் ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டது.

    விஸ்டன் அல்மனாக்கின் கூற்றுப்படி, முதல் தர கிரிக்கெட் போட்டி 1772-ல் விளையாடப்பட்டது. சுமார் 252 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது.
    • 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது.

    ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோவையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் அணி 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய் கிஷோர், வாரியார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    ரெயில்வேஸ் அணி 243 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
    • ரெயில்வேஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியாவின் முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட போட்டியான இதில் 3-வது போட்டி நேற்று தொடங்கியது. கோவை எஸ்.ஆன்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான ஜெகதீசன் முதல்நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் 155 ரன்களுடனும், முகமது அலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முகமது அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் ஜெகதீசனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சாய் கிஷோர் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

    சாய் கிஷோர் ஆட்டமிழந்த பிறகு எம். முகமது 20 ரன்னிலும், அஜித் ராம் 17 ரன்னிலும், வாரியார் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜெகதீசன் 245 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் ரெயில்வேஸ் அணி களம் இறங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தமிழ்நாடு அணி 363 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ்நாடு அணி 111 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. திரிபுராவுக்கு எதிரான 2-வது போட்டி டிராவில் முடிந்தது.

    • ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
    • கேரளா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.

    ரஞ்சி கோப்பையில் கடினமாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100-வது போட்டியில் விளையாடி சாதனை படைப்பதை லட்சியமாக வைத்திருப்பதாக ரகானே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ரஞ்சிக்கோப்பையில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் ஆனார். இதனையடுத்து இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- கேரளா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரான ஜெய் கோகுல் பிஸ்தா முதல் பந்திலும் ரகானே 2-வது பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

    கடைசி 2 இன்னிங்சில் 0 (1), 0 (1) என அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் இன்னும் 2024 ரஞ்சி கோப்பையில் 1 ரன் கூட எடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இப்படி செயல்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க முடியும்? என்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் ரகானே மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் மும்பையை இன்னிங்ஸ் மற்றும் 145 ரன் வித்தியாசத்தில் பந்தாடியது விதர்பா. #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனும் ஆன பாசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான டைடு உடன் வாசிம் ஜாபர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டைடு 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் குவித்தார். கணேஷ் சதிஷ் 90 ரன்களும், மொகித் கேல் 68 ரன்களும் சேர்க்க இருவரின் ஆட்டத்தால் விதர்பா முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது.

    பின்னர் மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிஸ்டா 64 ரன்களும், ரஞ்சானே 52 ரன்களும், முத்கர் 62 (அவுட் இல்லை) ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே மும்பை 252 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. விதர்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா இன்னிங்ஸ் மற்றும் 145 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்வா வீரர் சர்வாத் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    ரஞ்சி டிராபியில் ரெயில்வேஸ் அணிக்கெதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, அணியை 164 ரன்னில் வெற்றி பெற வைத்தார். #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் பரோடா - ரெயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஐந்தாவது வீரராக களம் இறங்கிய குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடி 160 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பரோடா அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. குருணால் பாண்டியாவின் (4 விக்கெட்) நேர்த்தியான பந்து வீச்சால் ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டது. 113 ரன்கள் முன்னிலையுடன் பரோடா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் பரோடா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். ஆனால் குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடி 104 ரன்கள் சேர்த்தார். இவரது சதத்தால் பரோடோ 157 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ரெயில்வேஸ் அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ரெயில்வேஸ் அணி 2-வது இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டது. இதனால் பரோடா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, 6 விக்கெட்டுக்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    ×