என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி: 18/5 என்ற நிலையில் 122 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்த ருதுராஜ்- சக்சேனா ஜோடி
- ருதுராஜ் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஜலஜ் சக்சேனா 49 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியாவில் உள்நாட்டில் நடக்கும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான 91-வது ரஞ்சி கோப்பை தொடர் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது. 'எலைட்' பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, பரோடா, நாகாலாந்து, நடப்பு சாம்பியன் விதர்பா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இதேபோல் 'பிளேட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும்.
இந்நிலையில் கேரளா- மராட்டியம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மகராஷ்டிரா அணி 1 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளையும் 18 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ருதுராஜ் மற்றும் ஜலஜ் சக்சேனா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 15-வது முதல் தர அரை சதம் ஆகும்.
இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது. 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜலஜ் சக்சேனா ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ருதுராஜ் 91 ரன்னில் வெளியேறினார்.
மழை காரணமாக ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மகாராஷ்டிரா அணி 59 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.






