செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்டில் ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில்: விஜய் சதத்தால் தமிழக அணி 292 ரன்கள் சேர்ப்பு

Published On 2017-11-10 06:01 GMT   |   Update On 2017-11-10 06:01 GMT
ரஞ்சி கிரிக்கெட் தொடரில், ஒடிசாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எம்.விஜய் சதத்தால் தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது.
மும்பை:

இந்த சீசனுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் மும்பை-பரோடா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

ரஞ்சி கிரிக்கெட்டில் 500-வது ஆட்டத்தில் கால்பதித்த முதல் அணி என்ற சிறப்புடன் களம் கண்ட மும்பை அணி, பரோடா வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 56.2 ஓவர்களில் 171 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஆதித்ய தாரே 50 ரன்கள் எடுத்தார். பரோடா அணி தரப்பில் வலக்கை வேகப்பந்து வீச்சாளர் அதித் ஷேத், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் லுக்மான் மெரிவாலா தலா 5 விக்கெட்டுகள் சாய்ததனர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பரோடா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

கட்டாக்கில் நடக்கும் தமிழ்நாடு-ஒடிசா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் நிறைவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் சேர்த்துள்ளது. தனது 21-வது முதல்தர சதத்தை எட்டிய எம். விஜய் 273 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 140 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 88 ரன்களும், கேப்டன் அபினவ் முகுந்த் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பாபா இந்த்ராஜித் (41 ரன்), விஜய் சங்கர் (8 ரன்) ஆகியோர் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளனர்.

கவுகாத்தியில் நடைபெறும் அசாமுக்கு எதிரான (ஏ பிரிவு) ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 74 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பின்னர் 7-வது விக்கெட் இணையான உபேந்திர யாதவ் (127 ரன்கள்), சவுரப்குமார் (133 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசியதுடன் அணியை சரிவில் இருந்து மீட்டனர். முடிவில் உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 73.2 ஓவர்களில் 349 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் சுரேஷ்ரெய்னா 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய அசாம் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்தது.

ராஜ்கோட்டில் நடக்கும் நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி தொடக்க நாளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்னெல் பட்டேல் 156 ரன்னுடனும், புஜாரா 115 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

பெங்களூருவில் நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய கர்நாடக அணி 4 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் திரட்டியது. மயங்க் அகர்வால் 169 ரன்னுடன் களத்தில் நிற்கிறார்.
Tags:    

Similar News