செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி

Published On 2017-08-24 18:30 GMT   |   Update On 2017-08-24 18:30 GMT
இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு:

இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.  அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால்  இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது.



இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் மிலிந்தா சிரிவர்தனா அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மழை குறுக்கிட்டதால், இந்திய அணிக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தொடக்க ஜோடியாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 15 ஓவர்களில் இந்தியா 100 ரன்னை கடந்தது.  அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, 45 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் எடுத்தார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். அவரை தொடர்ந்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை.



அதன்பின்னர், இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி இந்திய அணியினரின் விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக, இலங்கை அணியின் அகிலா தனஞ்செயா தனது சுழல் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும்  தோனியும், புவனேஷ்வர் குமாரும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி இலக்கை எட்டியது. புவனேஷ்வர் குமார்  முதன்முதலாக ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தார். புவனேஷ்வர் குமார் 53 ரன்னும், தோனி 45 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.  இந்த ஜோடி 100 ரன் பார்ட்னட்ஷிப் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

45 வது ஓவரில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 54 ரன்களும், புவனேஷ்வர் குமார் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News