செய்திகள்

இலங்கை ஒயிட்வாஷ் ஆனதற்கு கிரிக்கெட் வாரியமே காரணம்: முன்னாள் கேப்டன் ரணதுங்கே

Published On 2017-08-16 12:16 GMT   |   Update On 2017-08-16 12:16 GMT
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் கேப்டன் ரணதுங்கா கடுமையாக சாடியுள்ளார்.
கொழும்பு:

இந்திய அணி, இலங்கையுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டெஸ்ட் தொடரில், இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆனது.

முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும், வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒயிட் வாஷ் ஆனதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ரணதுங்கா கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:



இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. இந்த தோல்விக்கு நீங்கள் எந்த ஒரு வீரரையும் குறைசொல்லக் கூடாது. இதற்கு முழு முதல் காரணம் அணி நிர்வாகத்தினர் தான்.

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாக தலைவர் திலங்கா சுமதிபாலாவிடம், இலங்கை அடைந்த தோல்வி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும். எங்களிடம் தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் சிறப்பான தேர்வாளர்கள் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996-ஆம் ஆண்டில் ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News