உள்ளூர் செய்திகள்

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட ராஜீவ் காந்தியையும், அவரது மனைவியையும் படத்தில் காணலாம்.


வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை, பணம் கொள்ளை

Published On 2024-05-07 08:17 GMT   |   Update On 2024-05-07 08:17 GMT
  • வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி நகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்களிடம் 7 1/2 பவுன் தங்கச் சங்கிலி , ரூ.47ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

தருமபுரி அருகே உள்ள மொன்னையவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, டாஸ்மாக் ஊழியர். இவர் பழைய தருமபுரி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் நேற்று இரவு சின்னசாமி பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் அவருடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். அவரது வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவில உடல் உபாதை கழிப்பதற்காக சாந்தி எழுந்து வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த ரூ.47 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடி கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்ட சாந்தி மின் விளக்கை ஆன் செய்த போது சாந்தியின் கழுத்தில் இருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் 6-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. தனியார் சிப்ஸ் கடை உரிமையாளர். அவரது மனைவி ரேவதி. சம்பவத்தன்று 2 பேரும் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவரது கணவர் ராஜீவ் காந்தி தடுத்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து ராஜீவ் காந்தியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் ,கொள்ளை நடந்த 2 வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடையங்களை பதிவு செய்தனர்.

தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News