search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் கேப்டன்"

    ஆக்ரோஷமாக ஆடுவதை கைவிட்டால் ஒரு ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். #MichaelClarke #AUSvIND
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தற்போது தடையை அனுபவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. மைதானத்திலும், வெளியிலும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    வழக்கமாக ஆஸ்திரேலிய அணியினர், எதிரணியுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு சீண்டுவது உண்டு. இதனால் எதிரணி வீரர்கள் கோபத்தில் தவறு செய்வார்கள், அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களது யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது அவர்கள் சற்று சாந்தமாக ஆடுவது போல் தோன்றுகிறது. இது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை எரிச்சலூட்டியுள்ளது.

    இது தொடர்பாக கிளார்க் நேற்று அளித்த பேட்டியில் ‘மற்றவர்கள் நம்மை விரும்புவார்களா? இல்லையா? என்ற கவலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் விட்டுவிட வேண்டும். மாறாக மதிக்கத்தக்க அணியாக இருக்க வேண்டும். அதன் மீது தான் நம் கவலை இருக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ? ஆக்ரோஷமாகவும், கடினமான முறையிலும் விளையாடுவது தான் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை. அது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இந்த பாணியில் இருந்து வெளியேறி, மென்மையான போக்கை கடைபிடித்தால் உலகில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கும். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது. எல்லோரும் வெற்றியைத்தான் விரும்புகிறார்கள்’ என்றார்.

    ‘எதிரணி வீரர்களுடன் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டதை நினைத்து நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஸ்டீவ்வாக் போன்ற வீரர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்’ என்றும் கிளார்க் குறிப்பிட்டார்.

    கிளார்க்கின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எதிரணியினர் எங்களை விரும்ப வேண்டும் என்று நாங்கள் விவாதிக்கவில்லை. ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை ரசிகர்கள் நேசிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் பேசுகிறோம். மற்றபடி எதிரணி எங்களை விரும்புகிறார்களா? இல்லையா? என்பது பற்றி சிறிது கூட கவலையில்லை. மைக்கேல் கிளார்க் கூறுவது போல் தான், நாங்கள் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் வரிந்து கட்டி நிற்கப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் மிக கடினமாக போராடினோம். அதே போன்று தொடர்ந்து ஆடுவோம். ஹேசில்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற மூத்த வீரர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் நம்பிக்கை அதிகரிக்கும்’ என்றார்.

    இதற்கிடையே மைக்கேல் கிளார்க்குக்கு எதிராக குரல் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நாம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டோம் என்பதை கிளார்க் மறந்து விட்டார். தவறுகளை திருத்திக்கொண்டு முடிந்த வரைக்கும் சீக்கிரமாக ஆஸ்திரேலிய அணி மீதான நல்லெண்ணத்தை மீட்டெடுக்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #MichaelClarke #AUSvIND
    தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார். #FootballCaptain #Kulothungan
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குலோத்துங்கன் (வயது 40). கால்பந்து வீரரான இவர் தமிழக கால்பந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் தமிழக அணி சந்தோஷ் கோப்பை போட்டியில் பங்கேற்று இருக்கிறது.

    குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை திருச்சி செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    அதிகாலை 2 மணி அளவில் தஞ்சை- வல்லம் இடையே ஆலக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிள் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருந்த இரும்புகம்பி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குலோத்துங்கன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து உருவான மிகச் சிறந்த கால்பந்து வீரரான குலோத்துங்கன், மேற்கு வங்காளத்தில் பிரபலமான மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகம்மதன் ஸ்போர்ட்டிங் ஆகிய கிளப்புகளுக்காக விளையாடி இருக்கிறார். 2003-ம் ஆண்டு ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஈஸ்ட்பெங்கால் வென்ற போது அந்த அணியில் குலோத்துங்கனும் இடம் பிடித்திருந்தார்.

    இதே போல் மும்பை சிட்டி எப்.சி., விவா கேரளா, பவானிபோர் எப்.சி. ஆகிய கிளப்புகளுக்காகவும் ஆடியிருக்கிறார். சிறந்த நடுகள வீரரான குலோத்துங்கன் கோல் அடிப்பதிலும், கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதிலும் கைதேர்ந்தவர்.

    அவரது மறைவுக்கு கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குலோத்துங்கனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் இணைந்து விளையாடிய சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  #FootballCaptain #tamilnadu #Kulothungan #tamilnews 
    ×