செய்திகள்

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

Published On 2017-08-07 07:16 GMT   |   Update On 2017-08-07 07:16 GMT
இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து கேப்டன் விராட் கோலி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கொழும்பு:

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 வென்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே காலேயில் நடந்த முதல் டெஸ்டில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்து உள்ளது. 2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் முதலில் தொடரை வென்றது. அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்று இருந்தது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

வெற்றி எல்லாம் பந்து வீச்சாளர்களைத்தான் தான் சாரும். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக ஜடேஜா 2-வது இன்னிங்சில் நேர்த்தியாக வீசினார்.

தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடரை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

புஜாரா இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவரும், ரகானேவும், மிடில் வரிசையில் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் மன வலிமையுடன் இருக்கிறார்கள்.

எங்கு விளையாடினாலும் வெற்றி பெறுவதே எங்களது குறிக்கோள்.

இவ்வாறு வீராட்கோலி கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகள் மேலும் 3-வது மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News