இந்தியா

2019-ல் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்காதது ஏன்? பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி

Update: 2022-07-02 02:54 GMT
  • உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால், என் மீது காட்ட வேண்டும்.
  • ஆரேகாலனியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உள்ளேன்.

மும்பை

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. எனினும் தேர்தல் முடிவுக்கு பிறகு சிவசேனா முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு கேட்டது. இதனால் ஏற்பட்ட மோதலால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. மேலும் சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

இந்தநிலையில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை திரட்டி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இந்தநிலையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பா.ஜனதா, முதல்-மந்திரி பதவியை ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கியது. இதனால் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்து உள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜனதாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேள்வி கணைகளை தொடுத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

சிவசேனா தொண்டன் என கூறிகொள்பவரை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்கி உள்ளது. ஆனால் 2019-ல் சிவசேனாவுக்கு சூழற்சி முறையில் முதல்-மந்திரி பதவி தருவது தொடர்பான ஒப்பந்தமே நடக்கவில்லை என மறுத்தது ஏன்?. அப்போது பா.ஜனதா அதற்கு ஒப்புக்கொண்டு இருந்தால் அதிகார மாற்றம் அழகாகவும், கண்ணியமாகவும் நடந்து இருக்கும். தற்போது அடுத்த 2½ ஆண்டுகளுக்கு கூட உங்கள் முதல்-மந்திரி இல்லை. இதில் உங்களுக்கு என்ன கிடைத்தது?. அமித்ஷாவும் நானும் பேசியது போல நடந்து இருந்தால், அதிகார மாற்றம் நல்ல முறையில் நடந்து இருக்கும். நானும் முதல்-மந்திரி ஆகி இருக்க மாட்டேன். மகாவிகாஸ் அகாடியும் அமைக்கப்பட்டு இருக்காது.

2½ ஆண்டுகளுக்கு முன் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் முதுகில் குத்தியவர்கள், ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனா முதல்-மந்திரி என கூறி தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர் சிவசேனா முதல்-மந்திரி இல்லை. சிவசேனா இல்லாமல், சிவசேனா முதல்-மந்திரி இருக்க முடியாது. நீங்கள் (பா.ஜனதா) எனக்கு துரோகம் செய்தது போல, ஆரேகாலனி விவகாரத்தில் மும்பைக்கும் செய்துவிட வேண்டாம்.

மெட்ரோ பணிமனை திட்டத்தை காஞ்சூர் மார்க்கில் இருந்து ஆரேகாலனிக்கு மாற்றும் புதிய அரசின் முடிவு வருத்தமளிக்கிறது. உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால், என் மீது காட்ட வேண்டும். மும்பையின் இதயத்தில் குத்த வேண்டாம். ஆரேகாலனி யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. மெட்ரோ பணிமனை காஞ்சூர்மார்க்கில் இருக்கட்டும். ஆரேகாலனியில் வேண்டாம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்னுடன் உள்ளனர். ஆரேகாலனியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உள்ளேன். வனவிலங்குகள் அந்த காட்டில் உள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, மக்களின் வாக்குகளை வீணாக்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News