இந்தியா

டெல்லி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Published On 2024-02-21 07:15 GMT   |   Update On 2024-02-21 07:19 GMT
  • அரியானா மற்றும் பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
  • இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயற்சி செய்த காவல்துறையினர்.


புதுடெல்லி:

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி ஊர்வலம் செல்லும் போராட்டத்தை கடந்த

13-ந்தேதி தொடங்கினார்கள். அவர்களை சமரசம் செய்ய கடந்த 8, 12, 15 மற்றும் 18-ந்தேதிகளில் 4 தடவை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


கடந்த 18-ந்தேதி நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோளம், பருத்தி உள்ளிட்ட விளைப் பொருட்களை கொள்முதல் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

மத்திய அரசின் புதிய திட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் பிரச்சினையில் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இன்று (புதன்கிழமை) 9-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது.

இன்று மீண்டும் டெல்லியை நோக்கி ஊர்வலத்தை தொடங்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதற்காக நேற்று இரவு முதலே விவசாயிகள் டெல்லி அருகே உள்ள பஞ்சாப், அரியானா எல்லைகளில் குவிய தொடங்கினார்கள்.

1200 டிராக்டர்களுடன் விவசாயிகள் பஞ்சாப் மாநில எல்லையான சம்பு நகரில் குவிந்துள்ளனர். மேலும் 300 கார்கள் மற்றும் 10 மினி பஸ்களில் விவசாயிகள் அந்த எல்லை பகுதிக்கு வந்துள்ளனர். இதனால் இன்று காலை சம்பு பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது.

பஞ்சாப் எல்லையில் மட்டும் சுமார் 14 ஆயிரம் விவசாயிகள் திரண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று பகல் 11 மணிக்கு அவர்கள் டெல்லி நோக்கிய பயணத்தை தொடங்கினார்கள். தங்களது பயணம் அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று காலை தெரிவித்தனர்.


ஆனால் விவசாயிகள் தடை ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழையக்கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி புறநகர் பகுதிகளான நொய்டா, திக்ரி, சிங்கு, காசியாபூர் பகுதிகளிலும் விவசாயிகள் திரண்டு உள்ளனர். அவர்கள் டெல்லிக்குள் ஊடுருவி போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில எல்லைகளில் இரும்பு ஆணி மற்றும் சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் காணப்படுகிறது.

என்றாலும் விவசாயிகள் தடுப்புகளை உடைத்து விடக்கூடாது என்பதற்காக எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளை விரட்டுவதற்கான வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் வரும் சாலைகள் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தடுப்புகளை அகற்றும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை மத்திய-மாநில போலீசார் ஏற்க வில்லை. இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று கூறி உள்ளனர்.


இதன் காரணமாக மீண்டும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை எதிர்கொள்ள டெல்லி புறநகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக டெல்லி நகருக்குள்ளும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று ஊர்ந்தபடி சென்றன.

இத்தகைய சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு மீண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு தங்களது புதிய திட்டத்தை விவசாயிகள் ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. விவசாயிகளை பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து தூண்டி விடுவதாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

இச்சம்பவம் தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

5வது கட்டமாக விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.




Tags:    

Similar News