இந்தியா

இரட்டை இலை சின்னம் விவகாரம்- இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி

Published On 2023-01-30 06:05 GMT   |   Update On 2023-01-30 07:17 GMT
  • எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனு மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறி விசாரணையை தொடங்கினார்கள்.
  • எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் எதிர் மனுதாரர்கள் 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்துவதாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க இயலாது என்றும் ஓ.பன்னீர் செல்வம் ஐகோர்ட்டில் முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதில் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது சரிதான் என்றும் தீர்ப்பு கிடைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் இரு தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட் டில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு முறையிட்டார்.

இதற்கு பதில் அளித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக 30-ந்தேதி (இன்று) மனு செய்யுங்கள் நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று கூறி இருந்தது.

அதன்படி விரிவான மனு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையாக தாக்கல் செய்யப்பட்டு அது கோர்ட்டில் 'நம்பர்' ஆனது.

அந்த மனுவில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்ற வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் (எடப்பாடி பழனிசாமி) கட்சியை வழி நடத்தி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்த னர்.

அது மட்டுமின்றி தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள கோர்ட்டு உத்தரவிட கோரியும், தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனு மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறி விசாரணையை தொடங்கினார்கள்.

அப்போது எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் எதிர் மனுதாரர்கள் 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

இதையொட்டி தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர். பதில் அளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். அத்துடன் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News