இந்தியா

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்: நிதின் கட்காரி தகவல்

Published On 2022-07-29 08:38 GMT   |   Update On 2022-07-29 08:38 GMT
  • தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்தார்.
  • சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலை ஆகும்.

சென்னை-பெங்களூர் இடையே 4 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், 'சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 106 கி.மீ தூரம் செல்லும் இந்த பாதையில் 3 கட்டங்களாக பணிகள் தொடங்கியுள்ளன' என்று தெரிவித்தார்.

சென்னை-பெங்களூர் 4 வழி எக்ஸ்பிரஸ் சாலை மொத்தம் ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இது மொத்தம் 262 கி.மீ நீளம் கொண்டது. கர்நாடகாவில் 71 கி.மீட்டரும், தமிழகத்தில் 106 கி.மீட்டரும், ஆந்திராவில் 85 கி.மீட்டரும் நீளம் கொண்ட தாக இந்த சாலை அமைகிறது.

இது சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலை ஆகும். இந்த சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணிகள் முடிந்துவிட்டால் சென்னையில் இருந்து 3 மணிநேரத்துக்குள் பெங்களூர் செல்ல முடியும்.

இந்த சாலை 120 கி.மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் அதே வேகத்தில் பயணிக்க முடியும். சாலையின் இரு புறமும் வேலி அமைக்கப்படுவதால் விலங்குகள் சாலைக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இதில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சர்வீஸ் சாலை கிடையாது. 2 இடங்களில் மட்டுமே குடியிருப்புகள் வழியாக இந்த சாலை செல்கிறது. மற்ற பகுதி எல்லாமே திறந்த வழியாக செல்கிறது.

Tags:    

Similar News