இந்தியா

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மையின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது: காங்கிரஸ்

Published On 2022-08-10 04:02 GMT   |   Update On 2022-08-10 04:02 GMT
  • பா.ஜனதாவில் 3-வது முதல்-மந்திரி நியமிக்கப்படும் காலம் கூடி வந்துள்ளது.
  • கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா மீதான ஊழல் புகார்கள், பணி நியமன முறைகேடுகள், 40 சதவீத கமிஷன் புகார் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சமீபத்தில் பா.ஜனதா நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகள் அரசுக்கு எதிராக தங்களின் கருத்துகளை கூறி வருகிறார்கள். பலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பா.ஜனதா மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவுக்கு வந்து சென்ற பிறகு பா.ஜனதாவில் மேக மூட்டமான சூழல் காணப்படுகிறது. பா.ஜனதாவில் 3-வது முதல்-மந்திரி நியமிக்கப்படும் காலம் கூடி வந்துள்ளது. பசவராஜ் பொம்மையின் ஆட்டம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அமித்ஷா வந்து சென்றது குறித்து எந்த மந்திரியும் வாய் திறக்காமல் இருப்பதே இதற்கு சாட்சி.

பசவராஜ் பொம்மைக்கும், பா.ஜனதாவினருக்கும் போலி ரூபாய் நோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் என்ன தொடர்பு உள்ளது?. சமூக விரோதிகள், பிட்காயின் முறைகேடு செய்பவர்கள், 40 சதவீத கமிஷன்காரர்கள், பணி நியமன முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் கைப்பாவையாக பசவராஜ் பொம்மை செயல்படுகிறாரா?. முதல்-மந்திரி நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள இந்த தவறு செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவாக நிற்கிறீர்களா?.

பசவராஜ் பொம்மை ஆட்சி அதிகாரத்தை விட்டு கீழே இறங்கும் நேரம் நெருங்கிவிட்டது போல் தெரிகிறது. முதல்-மந்திரி மாற்றத்திற்கு காரணம் என்ன?. முதல்-மந்திரியின் தோல்விகளா? அல்லது பா.ஜனதாவின் உட்கட்சி மோதலா?. கர்நாடகத்தில் மழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு 3-வது முதல்-மந்திரியை தேடும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி அதில் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News