இந்தியா
டெல்லியில் நடந்த தேசிய வாக்காளர் தினவிழா

கொரோனா காலத்தில் சிறப்பாக நடந்த தேர்தல் - தேசிய விருது வென்ற தமிழகம்

Published On 2022-01-25 12:58 GMT   |   Update On 2022-01-25 12:58 GMT
மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகின்றன. 
 
இந்தத் தேர்தல்களை சரியாக நடத்தி முடிக்க மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை தேசிய தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. 

இதற்கிடையே, கடந்த ஆண்டில் கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக தமிழக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  சிறப்பாக பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கு டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் விருதுகள்  வழங்கப்பட்டன. இந்த விழாவில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா பரவல் காலத்திலும் தமிழக  சட்டசபை தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக சிறந்த தேர்தல் நிர்வாகத்துக்கான தேசிய விருது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு மத்திய சட்டத்துறை  மந்திரி கிரண் ரிஜிஜு  விருதை வழங்கினார்.

இதேபோல், மாவட்ட அளவில் தகவல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கான விருதை நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு  பெற்றுக்கொண்டார்.

வாக்காளர்களுக்கு , குறிப்பாக திருநங்கைகள், நரிக்குறவர் சமுதாய மக்கள் மத்தியில் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி  செயல்பட்டதற்காக,  தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி  செந்தில் ராஜுவுக்கு  விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , தமிழக வாக்காளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

Tags:    

Similar News