இந்தியா
சித்தராமையா

பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: சித்தராமையா

Published On 2022-01-25 03:45 GMT   |   Update On 2022-01-25 03:45 GMT
பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது கூட என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் யார்?, எப்போது காங்கிரசில் சேருவார்கள்? என்பது பற்றி பகிரங்கமாக சொல்ல முடியாது.
பெங்களூரு :

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதாவில் தற்போது மந்திரி பதவிக்காக தனித்தனியாக கும்பல் சேருவது தொடங்கி விட்டது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போதும், ஒரு கும்பல் இருந்தது. தற்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருக்கும் போதும் ஒரு கும்பல் தனியாக இருக்கிறது.

பா.ஜனதா கட்சி ஒழுக்கத்தை கடைபிடிக்கும் என்று பெருமைக்கு சொல்வார்கள். உண்மையில் அந்த கட்சியில் ஒழுக்கம் கிடையாது. பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது கூட என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். அவர்கள் யார்?, எப்போது காங்கிரசில் சேருவார்கள்? என்பது பற்றி பகிரங்கமாக சொல்ல முடியாது.

அவர்கள் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. காங்கிரசுடன் 2 கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்பில் இருக்கிறார்கள்.

பா.ஜனதாவில் நடைபெறும் மந்திரி பதவிக்கான போட்டியால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகள் மீது பா.ஜனதாவினர் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை. அவர்களது சொந்த விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரியவில்லை. பாதாமி, சாம்ராஜ்பேட்டை, சிக்கநாயக்கனஹள்ளி மக்கள், என்னை அங்கு போட்டியிடும்படி அழைக்கிறார்கள். காங்கிரஸ் மேலிடம் எந்த தொகுதியில் போட்டியிடும்படி கூறுகிறதோ, அங்கு நான் போட்டியிடுவேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News