இந்தியா
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி

நாடு முழுவதும் இன்று முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-01-10 03:20 GMT   |   Update On 2022-01-10 03:20 GMT
ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி குறித்த கைபேசி குறுந்தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசும் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் அளவு 151.57 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அடுத்த கட்டமாக 2022 ஜனவரி 10 முதல் சுகாதாரப் பாதுகாப்பு,  முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என்று டிசம்பர் 25ந்தேதி அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று  கொரோனா பூஸ்டர் டோஸ், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை தொடங்குகிறது.  

கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் பெறுவதற்காக மருத்துவரின் சான்றிதழ் அல்லது மருந்துச் சீட்டைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கோவின் தளம் மற்றும் செயலி மூலம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.  தகுதியான நபர்கள், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 39 வாரங்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கோடிக்கும் அதிகமான சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்கள்,  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் முன்னெச்சரிக்கை தகவல் கைபேசி குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி  டாக்டர் மனுசுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில்,  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்கள், முன்னணி பணியாளர்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு, பூஸ்டர் டோஸ் பெற  தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News