இந்தியா
கொரோனா வைரஸ்

தினசரி பாதிப்பு 7 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 1.17 லட்சம் பேருக்கு கொரோனா

Published On 2022-01-07 04:38 GMT   |   Update On 2022-01-07 04:38 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 221 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று 302 பேர் இறந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் சுனாமி வேகத்தில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் 3-ம் அலை காரணமாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,17,100 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 52 லட்சத்து 26 ஆயிரத்து 386 ஆக உயர்ந்தது.

கடந்த ஜூன் 6-ந்தேதி தினசரி பாதிப்பு 1 லட்சம் என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் 214 நாட்களில் இல்லாத அளவில் பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த 27-ந்தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 6,358 ஆக இருந்தது. மறுநாள் 9 ஆயிரமாகவும், 29-ந்தேதி 13 ஆயிரமாகவும் உயர்ந்தது. அதன்பிறகு 8 நாட்களில் 1 லட்சத்தை தாண்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் புதிதாக 36,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினத்தைவிட 36.6 சதவீதம் அதிகம் ஆகும். இதில் மும்பையில் மட்டும் 20,181 பேர் அடங்குவர்.

மேற்கு வங்கத்தில் நேற்று 15,421 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் கொல்கத்தாவில் மட்டும் 6,569 பேர் அடங்குவர். டெல்லியில் தினசரி பாதிப்பு 10,665-ல் இருந்து 15,097 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 4,862-ல் இருந்து 6,983 ஆகவும், கர்நாடகாவில் 4,246-ல் இருந்து 5,031 ஆகவும் அதிகரித்துள்ளது. குஜராத்தில் 3,350-ல் இருந்து நேற்று 4,213 ஆக பாதிப்பு உயர்ந்தது.

இதேபோல உத்தரபிரதேசத்தில் 2,038-ல் இருந்து 3,114 ஆகவும், ராஜஸ்தானில் 1,615-ல் இருந்து 2,656 ஆகவும், அரியானாவில் 2,176-ல் இருந்து 2,678 ஆகவும், பீகாரில் 1,659-ல் இருந்து 2,379 ஆகவும் உயர்ந்தது. ஜார்கண்டில் நேற்று ஒரேநாளில் 3,704 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 221 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று 302 பேர் இறந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,41,452, கேரளாவில் 49,084 பேர் அடங்குவர்.

தொற்றின் பிடியில் இருந்து நேற்று 30,836 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 71 ஆயிரத்து 845 ஆக உயர்ந்தது.



தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,71,363 ஆக உயர்ந்தது. இது நேற்று முன்தினத்தை விட 85,962 அதிகம் ஆகும்.

கடந்த 21-ந்தேதி நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. 31-ந் தேதி இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. அடுத்த 4 நாட்களில் 2 லட்சத்தை தாண்டிய நிலையில், இன்று 3.5 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, 68.68 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 15,13,373 மாதிரிகள் அடங்கும்.


Tags:    

Similar News