இந்தியா
டெல்லியில் பா.ஜனதா நடத்திய சாலைமறியல் போராட்டத்தால் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் காட்சி.

பாஜகவின் சாலை மறியலால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-01-04 02:43 GMT   |   Update On 2022-01-04 02:43 GMT
பா.ஜனதா நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நகர முடியாதநிலையில், மக்கள் மெட்ரோ ரெயில்களுக்கு படையெடுத்தனர்.
புதுடெல்லி :

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, நகரம் முழுவதும் 849 பிரீமியம் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்கைக்கு எதிராக டெல்லி பா.ஜனதா சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் 15 முக்கிய இடங்களில் நேற்று காலை போராட்டம் தொடங்கியது.

பா.ஜனதா தொண்டர்கள், டெல்லி அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து முடங்கியது. காலை நேரத்தில் அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

ஆட்டோக்கள், வாடகை கார்களும் இயங்க முடியவில்லை. இதனால், பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவாயில்வரை மக்கள் வரிசையில் நின்றனர். மெட்ரோ ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் நின்றபடி பயணித்தனர்.

‘‘காலை 9 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்ட நான், 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறேன்’’ என்று ஒரு பயணி கூறினார். மற்றொருவர், ‘‘4 கி.மீ. தூரத்தை கடக்க 3 மணி நேரம் ஆகிவிட்டது’’ என்று கூறினார்.

இருப்பினும், 2 முக்கிய சாலைகளில் மட்டும் நெரிசல் இருந்ததாகவும், அதையும் சரி செய்து விட்டதாகவும் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி அக்ஷர்தாம் கோவில் அருகே டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் சாலை மறியல் நடந்தது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது ஆதேஷ் குப்தா கூறியதாவது:-

மக்கள் நலனுக்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த அவதியை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டெல்லி அரசு நகரம் முழுவதும் சட்டவிரோதமாக மதுக்கடைகளை திறந்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளை செயல்பட விட மாட்டோம். இந்த கொள்கையை திரும்பப்பெறும்வரை போராட்டம் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பா.ஜனதா மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-

சட்டவிரோத மது விற்பனை மூலம் டெல்லி பா.ஜனதா தலைவர்களும், சாராய வியாபாரிகளும் ரூ.3 ஆயிரத்து 500 கோடி சம்பாதித்து வந்தனர். இந்த கொள்ளையை அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதனால்தான் பா.ஜனதா தலைவர்கள் நடுக்கம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News