செய்திகள்
மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து

மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து: பெண் டாக்டர், 3 செவிலியர்கள் கைது

Published On 2021-11-10 02:48 GMT   |   Update On 2021-11-10 02:48 GMT
அரசு ஆஸ்பத்திரி தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவத்தில் பெண் டாக்டர், 3 செவிலியர்களை மராட்டிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மும்பை :

மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் 65 முதல் 83 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு 7 நபர் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி நடத்திய விசாரணையில் கிடைத்த முதல் கட்ட தகவலின் பேரில் டாக்டர்கள் சுனில் போகர்னா, சுரேஷ் தக்னே, விஷாகா ஷிண்டே, செவிலியர் சப்னா பதாரே ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் செவிலியர்கள் அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பெண் டாக்டரான விஷாகா ஷிண்டே மற்றும் செவிலியர்களான சப்னா பதாரே, அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோரை அகமது நகர் கிராமப்புற போலீசார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது கொலை அல்லாத மரணத்தை விளைவித்தல், கவனகுறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து அகமது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் பாட்டீல் கூறியதாவது:-

சம்பவம் நடந்தபோது டாக்டர் விஷாகா ஷிண்டே பணியில் இருந்தார். ஆனால் சம்பவம் குறித்து அவர் அறிக்கை அளிக்க தவறிவிட்டார். கைதான 3 செவிலியர்களும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வெளியே இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நோயாளிகளை காப்பாற்ற வார்டுக்குள் சென்று உறவினர்கள் போராடிய போது, இந்த செவிலியர்கள் வெளியே தான் நின்று உள்ளனர். இதனால் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டரும், செவிலியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News