செய்திகள்
உம்மன் சாண்டி

சூரிய மின்தகடு ஊழல்- உம்மன் சாண்டிக்கு எதிரான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றம்

Published On 2021-08-18 04:50 GMT   |   Update On 2021-08-18 04:50 GMT
ஏ.பி.அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலும், காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர் ஆவார். தற்போது பாரதிய ஜனதாவில் இருக்கிறார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் தனது நிறுவனத்தின் மூலம் சூரிய மின்தகடுகளை பொருத்தி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சில திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், அப்போது முதல்-மந்திரியாக இருந்த உம்மன் சாண்டியின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே சரிதா நாயர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் உம்மன் சாண்டி, அவருடைய மந்திரி சபை சகாக்கள் 2 பேர், முன்னாள் மத்திய மந்திரிகள் 2 பேர் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர், தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும், நிதி முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால், ஹைபி ஈடன், அடூர் பிரகாஷ், ஏ.பி.அனில்குமார், ஏ.பி.அப்துல்லா குட்டி ஆகியோர் மீது கேரள குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் 6 வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்களில் ஏ.பி.அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலும், காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர் ஆவார். தற்போது பாரதிய ஜனதாவில் இருக்கிறார். உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீதான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு உம்மன்சாண்டி உள்ளிட்டோருக்கு எதிரான 6 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News