செய்திகள்
ராகுல் காந்தி

3 நாள் சுற்றுப்பயணம்... வயநாட்டில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த ராகுல் காந்தி

Published On 2021-08-16 11:02 GMT   |   Update On 2021-08-16 11:02 GMT
இன்று நம்மிடையே இருக்கும் பலர், நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கூறுகிறார்கள், பின்னர் அவர்களே மற்றவர்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
வயநாடு:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாக தனது மக்களவை தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு இன்று வந்து சேர்ந்தார். தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இன்று பிற்பகல் மனந்தவடியில் மகாத்மா காந்தி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்தியைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் எதைச் சொன்னாலும் அதைச் செயல்படுத்துவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னார், அவரும் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டார். இந்தியா தனது பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சொன்னார், அவர் பெண்களை மரியாதையுடன் நடத்தினார்.

இன்று நம்மிடையே இருக்கும் பலர், நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கூறுகிறார்கள், பின்னர் அவர்களே மற்றவர்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள். பெண்களை மதிக்கும் இந்தியா வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்களே பெண்களை மதிக்கவில்லை. அவர்கள் ஒரு மதச்சார்பற்ற தேசத்தை விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் அவர்களே மதங்களை வித்தியாசப்படுத்தி பார்க்கிறார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Tags:    

Similar News