செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Published On 2021-07-27 06:25 GMT   |   Update On 2021-07-27 08:28 GMT
அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சனை, சசிகலாவின் செயல்பாடுகள் போன்றவை பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றனர்.

நேற்று அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இத்துடன் கட்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் பிரதமரிடம் பேசியதாக தெரிகிறது.

அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சனை, சசிகலாவின் செயல்பாடுகள் போன்றவை பற்றி அவர்கள் பிரதமரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை, தமிழக அரசு அ.தி.மு.க. மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.


பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இரு தலைவர்களும் டெல்லியிலேயே முகாமிட்டு இருந்தனர். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து விட்டு நேற்று பிரதமரிடம் பேசிய விவகாரங்களை அமித்ஷாவிடமும் தெரிவித்ததாக தெரிகிறது.

அப்போது அமித்ஷா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கூட்டணியை தொடர்வது பற்றியும் அவர்கள் பேசினார்கள்.

மேலும் 10 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதித்துள்ளனர். பிரதமர் மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பில் எம்.பி.க்கள் தம்பிதுரை, ரவீந்திரநாத் குமார், எம்.எல்.ஏ.க்கள் வேலுமணி, மனோஜ்பாண்டியன், தளவாய்சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். இன்று அமித்ஷாவை சந்தித்தபோது அவர்களும் வந்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலையே சென்னை திரும்ப உள்ளனர்.

Tags:    

Similar News