செய்திகள்
டுவிட்டர்

தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கி நடக்க டுவிட்டருக்கு மத்திய அரசு கடைசி நோட்டீஸ்

Published On 2021-06-05 21:02 GMT   |   Update On 2021-06-05 21:02 GMT
சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடுகிற வகையில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை மத்தியில் உள்ள மோடி அரசு கொண்டு வந்துள்ளது
புதுடெல்லி:

பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர்போன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான பதிவுகள் வெளியாவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடுகிற வகையில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை மத்தியில் உள்ள மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் கடந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த விதிமுறைகளை ஏற்பதற்கு சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அவகாசம் முடிந்து விட்டது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் இன்னும் இந்த விதிமுறைகளை ஏற்பதற்கு உடன்படவில்லை.

இந்த நிலையில், டுவிட்டருக்கு மத்திய அரசு தனது இறுதி எச்சரிக்கை நோட்டீசை அனுப்பி உள்ளது. மத்திய அரசின் சார்பில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:-



தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை விதிகளுக்கு டுவிட்டர் இணங்கி, பின்பற்றி நடக்க மறுப்பது, இந்த தளத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இந்திய மக்களுக்கு அதன் தளத்தில் ஒரு பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியின்மையை நிரூபிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வந்துள்ளது. ஆனாலும் இந்திய மக்களுக்கு தங்களது பிரச்சினைகளை சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில், நியாயமான செயல்முறைகள், உரிய மனித வளங்கள் மூலம் தீர்க்க உதவும் ஒரு செயல்முறையை உருவாக்க மறுத்து விட்டது.

மே 26-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டாலும், டுவிட்டர் இணங்கி செயல்படுத்தாததால் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இருப்பினும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப விதிகளுக்கு உடனடியாக இணங்க டுவிட்டருக்கு கடைசி அறிவிப்பு வழங்கப்படுகிறது. தவறும் பட்சத்தில், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிற இந்திய தண்டனை சட்டத்தின் கீழான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News