செய்திகள்
சித்தராமையா

பிரதமர் மோடியின் 7 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பூஜ்ஜியம்: சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2021-06-01 03:20 GMT   |   Update On 2021-06-01 03:20 GMT
70 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு நிறுவப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்துவிட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் வளர்ச்சியில் நாடு வேகமாக பின்னோக்கி செல்கிறது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 3 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டது. அந்த கடன் தொகையை முழுமையாக செலுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எந்த தொழிலும் இல்லாத நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் எப்படி கடனை திருப்பி செலுத்துவார்கள். அதனால் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிவாரண உதவி திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதில் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.494 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை, அந்த தொழிலாளர்களின் நல வாரியத்தில் உள்ள நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாது. அரசு தனது நிதியில் இருந்து நிவாரணமாக ரூ.617 கோடி மட்டுமே வழங்குகிறது.

அண்டை மாநிலங்களை விட கர்நாடகத்தின் நிதி நிலை நன்றாக உள்ளதாக எடியூரப்பா கூறினார். அப்படி என்றால், அந்த மாநிலங்கள் வழங்கியுள்ள நிவாரண உதவிகளை விட அதிகமாக கர்நாடகம் வழங்க வேண்டும். பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியின் சாதனை பூஜ்ஜியம். நாடு இருட்டில் சிக்கி தவிக்கிறது. மக்களின் கண்களில் கண்ணீர் வடிகிறது.

பொய்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை பா.ஜனதா. 70 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு நிறுவப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்துவிட்டது. அதற்கு பதிலாக பொய் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் வளர்ச்சியில் நாடு வேகமாக பின்னோக்கி செல்கிறது.

மத்திய பா.ஜனதா அரசின் 7 பெரிய பேரழிவு திட்டங்களால் நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதாவது, பண மதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி., கொரோனா 2-வது அலை உருவாக காரணமாக இருந்தது, ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதந்தது, விவசாய விரோன சட்டங்களை கொண்டு வந்தது, வேலையின்மை, நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை சொத்துகளை விற்பனை செய்தது, விலைவாசி உயர்வு போன்றவை ஆகும்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் திவாலாகி வருகின்றன. மாநிலங்கள் திவாலானால், நாடும் திவலானதாக அர்த்தம். சாமானிய குடும்பங்கள் கடந்த 2019-ம் ஆண்டு மாதம் ரூ.5 ஆயிரத்தில் குடும்பத்தை நடத்தின. ஆனால் இன்று அது ரூ.11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மக்களின் உழைப்பால் கிடைக்கும் பலன், அம்பானி, அதானிக்கு செல்கிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News