செய்திகள்
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தனர்

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தனர்

Published On 2021-05-28 03:15 GMT   |   Update On 2021-05-28 03:15 GMT
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 98 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர். மேலும் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தனர்.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை 91 ஆயிரத்து 341 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகளை அடையாளம் காண மாநில அரசு 36 மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவை அமைத்து உள்ளது.

இந்த குழு வைரஸ் நோய்க்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வாழ்விடங்களை ஏற்பாடு செய்தல், சரியான நபர்களிடம் அந்த குழந்தைகள் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் இதுபோன்ற குழந்தைகள் சட்டவிரோத கும்பல் கைகளில் சிக்குவதை தடுக்க அரசு உதவி எண்ணையும் அறிமுகம் செய்து உள்ளது.

இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனாவுக்கு 1,572 குழந்தைகள் பெற்றோரை இழந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள தகவலில் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்து இருப்பதாகவும், 98 குழந்தைகள் தாய், தந்தை என 2 பேரையும் இழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தாய், தந்தை 2 பேரையும் இழந்த குழந்தைகளில் கவனிக்க யாரும் இல்லாத 10 குழந்தைகளை தங்கள் வசம் வைத்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Tags:    

Similar News