செய்திகள்
கோப்புப்படம்

கங்கையில் மனித உடல்களை கொட்டுவதை தடுங்கள் - உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Published On 2021-05-16 23:07 GMT   |   Update On 2021-05-16 23:07 GMT
மனித உடல்களை கங்கை ஆற்றில் கொட்டுவதைத் தடுக்கும்படி உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

புனித நதி என்று போற்றப்படுகிற கங்கை நதியில், கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் வீசப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

முதலில் பீகார் மாநிலத்திலும், அடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலும் கங்கை ஆற்றில் மனித உடல்கள் மிதந்து வந்து கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றிய காட்சிகளும், தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலிகள் அதிகரிப்பால் தகன மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல், விறகுக்கட்டைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு, அடக்கம் செய்வதில் இடப்பிரச்சினை என பல காரணங்களால், கொரோனாவால் இறந்தவர்களை ஜலசமாதி அடைகிற வகையில் கங்கை ஆற்றில் வீசி விடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதையொட்டி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினமும், நேற்றும் இரு ஆய்வுக்கூட்டங்களை நடத்தியது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு கூறுகையில், “கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளில் இறந்த உடல்கள், ஓரளவு எரிக்கப்பட்ட அல்லது அழுகிய உடல்களை போடுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மிகவும் விரும்பத்தகாதது மற்றும் ஆபத்தானது” என குறிப்பிட்டது.

மேலும், கங்கை ஆற்றில் இப்படி உடல்களை கொட்டுவதை மாநிலங்கள் தடுக்க வேண்டும், இறந்தவர்களின் உடல்களை உரிய விதத்தில் அகற்ற வேண்டும். கண்ணியமான தகனத்தை உறுதி செய்வதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகளை மத்திய ஜலசக்தி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

அந்த மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், சுகாதார துறையுடன் கலந்தாலோசித்து தண்ணீரின் தரத்தை அடிக்கடி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அரசு உத்தரவுகளை திறம்பட செயல்படுத்துவதில் நேர இழப்பு ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News