செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-05-09 00:21 GMT   |   Update On 2021-05-09 00:21 GMT
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
புதுடெல்லி:

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் இந்த ஆண்டும் பரோலில் உடனடியாக விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரித்தது.

இதுதொடர்பான உத்தரவு நேற்று வெளியானது. அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கோர்ட்டுகளின் உத்தரவுப்படி ஏற்கனவே பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்

டெல்லி திகார் உள்ளிட்ட சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிடுவது போல, பிற மாநிலங்களும் அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.

சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளுக்கு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்தால் அவர்கள் வீடு சென்று சேர போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.

சிறையில் கொரோனா பரவலைத் தடுக்க அவ்வப்போது கைதிகளுக்கு மட்டுமின்றி, சிறை அதிகாரிகள், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சிறை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

பரோலில் செல்ல விரும்பாத கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை சிறையில் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் கைதிகள், எந்த வகையிலான கைதிகளை நன்னடத்தை பரோல், இடைக்கால பரோல் ஆகியவற்றின் கீழ் விடுவிக்கலாம் என்பதை முடிவு செய்ய சட்டத்துறைச் செயலாளர், மாநில சட்ட உதவி ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர் அதிகார குழுவை அமைக்க மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News