செய்திகள்
கோப்புப்படம்

95 நாளில் 13 கோடி டோஸ் செலுத்தப்பட்டது - கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா சாதனை

Published On 2021-04-21 23:52 GMT   |   Update On 2021-04-21 23:52 GMT
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3-ந்தேதி ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3-ந்தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த மாதம் 16-ந்தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடன் போராடுகிறவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

அடுத்த மாதம் 1-ந்தேதி 3-வது கட்டத்தை இந்த தடுப்பூசி திட்டம் சந்திக்க இருக்கிறது. அப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்த தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், தடுப்பூசி திட்டம்வேகம் பிடித்து வருகிறது.

அந்த வகையில் சாதனை அளவாக 95 நாளில் 13 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளன. இது மிக வேகமாக தடுப்பூசி போடப்படும் நாடாக இந்தியாவை உலக அரங்கில் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஏனென்றால், இந்த 13 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளைப் போடுவதற்கு அமெரிக்காவுக்கு 101 நாள் ஆனது. சீனாவுக்கு 109 நாட்கள் ஆயின.

ஆனால் இந்தியாவில் 95 நாளில் சரியாக 13 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரத்து 310 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நேற்று காலை 7 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டுமே நாட்டில் 29 லட்சத்து 90 ஆயிரத்து 197 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 59.33 சதவீதம், மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய 8 மாநிலங்களில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News