செய்திகள்
முதல் மந்திரி எடியூரப்பா

எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு - அனைத்துக்கட்சி கூட்டம் தள்ளிவைப்பு

Published On 2021-04-17 20:36 GMT   |   Update On 2021-04-17 20:36 GMT
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்திருந்தது.

இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசு தீர்மானித்திருந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக முதல் மந்திரி எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா டிஸ்சார்ஜ் ஆனதும் வரும் 20-ம் தேதி அல்லது 21-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.



இதற்கிடையே, பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு மாநகர எம்.எல்.ஏ.க்களுடன், மூத்த மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக முதல் மந்திரி எடியூரப்பா கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வரும் 20-ம் தேதியில் இருந்தே கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் மூடப்படலாம் என்றும், தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News