செய்திகள்
இரவுநேர ஊரடங்கு

பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்

Published On 2021-04-10 02:07 GMT   |   Update On 2021-04-10 02:07 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது.

இதனால் வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூரு நகர், மைசூரு, கலபுரகி, பீதர், உடுப்பி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் பெங்களூரு நகர், மைசூரு, மங்களூரு, உடுப்பி, மணிப்பால், பீதர், கலபுரகி, துமகூரு ஆகிய 8 நகரங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் இரவு நேர கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

தினமும் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு கூறியுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 20-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கிற்கான வழிகாட்டுதலை தலைமை செயலாளர் ரவிக்குமார் நேற்று வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

* இந்த இரவு நேர ஊரடங்கின்போது, நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அவருடன் உதவியாளர் செல்லலாம்.

* இரவு நேரங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் எந்த தடங்கலும் இன்றி செயல்படலாம். ஆனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்னரே பணிக்கு வந்துவிட வேண்டும்.

* மருத்துவ சேவைகள் வழங்கும் மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகளை வழங்கும் அமைப்புகளை தவிர பிற அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

* அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வினியோகம் செய்யும் வாகனங்கள், மின்னணு வணிகம் மற்றும் அது தொடர்பான காலி வாகனங்கள் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

* இரவு நேரத்தில் பஸ், ரெயில், விமான போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை. இதில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்களை வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து பஸ், ரெயில், விமான நிலையம், அங்கிருந்து விடுகளுக்கு ஆட்டோ, வாடகை கார்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த வழிகாட்டுதலை பெங்களூரு மாநகராட்சி மற்றும் பிற 7 நகரங்களின் மாவட்ட கலெக்டர்கள் தவறாமல் அமல்படுத்த வேண்டும். சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது இயற்கை பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், மதுக்கடைகள், பல சரக்கு கடைகள், காய்கறி கடைகள், உணவகங்கள் அனைத்து வகையான வணிக ரீதியிலான கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். 10 மணிக்கு மேல் போலீசார் பெங்களூருவில் ரோந்து சென்று, வழிகாட்டுதல் அமல்படுத்துவதை உறுதி செய்வார்கள் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

மேலும் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் பொது இடங்களில் நடமாட அனுமதி கிடையாது. அவ்வாறு நடமாடினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் இரவு 10 மணிக்கு மேல் முக்கியமான சாலைகளை தவிர்த்த பிற சாலைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. பஸ், ரெயில், விமான நிலையங்களுக்கு செல்லும் டிக்கெட் உள்ள பயணிகளை மட்டும் அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்ேபாது அரசு ேபாக்குவரத்து கழக ஊழியர்கள் ேபாராட்டம் நடத்தி வருவதால், தனியார் பஸ்கள், ஆட்டோ-வாடகை கார்கள் ஓட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இரவு 10 மணிக்கு மேல் தனிநபர் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

கடந்த ஆண்டு (2020) அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறை கர்நாடகத்தில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் என்றும், ஊரடங்கு நேரத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News