செய்திகள்
உத்தவ் தாக்கரே

கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே

Published On 2021-03-13 22:08 GMT   |   Update On 2021-03-13 22:08 GMT
மராட்டியத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மும்பை:

மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் நேற்று 2 வது நாளாக தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. புதிதாக 15 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் மின்னல் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று ஓட்டல், உணவகம், வணிக வளாக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடந்தது.

அப்போது ஓட்டல், உணவகம், வணிக வளாக உரிமையாளர்களுக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

மராட்டியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் ஓட்டல், உணவகங்கள், வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. தற்போது அதில் மெத்தனம் காட்டப்படுகிறது. சுய ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும் வேற்றுமை உள்ளது. சுய ஒழுக்கம் அவசியம். சமீபத்தில் மும்பை வந்த மத்திய குழு அதிகாரி ஒருவர் இங்குள்ள ஓட்டலில் யாரும் முக கவசம் அணியவில்லை என்று என்னிடம் புகார் தெரிவித்தார்.

இந்த நிலையில் நான் கடைசி எச்சரிக்கை விடுக்கிறேன். முழு ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு அரசை தள்ள வேண்டாம். முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் அரசுக்கு விருப்பம் கிடையாது. ஆனால் நீங்கள் அதற்கு எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள். அரசின் அனைத்து வழிகாட்டுதலையும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

கொரோனா பரவல் மின்னல் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Tags:    

Similar News