செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா காலத்தில் எந்தக் குழந்தைக்கும் ஆன்லைன் வழி கல்வி கிடைக்காமல் போகவில்லை: பிரகாஷ் ஜவடேகர்

Published On 2021-02-09 02:03 GMT   |   Update On 2021-02-09 02:03 GMT
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா தொற்றின்போது நாட்டில் எந்தக் குழந்தைக்கும் ஆன்லைன் வழி கல்வி கிடைக்காமல் போகவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
புதுடெல்லி :

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

‘மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா தொற்றின்போது நாட்டில் எந்தக் குழந்தைக்கும் ஆன்லைன் வழி கல்வி கிடைக்காமல் போகவில்லை.

கல்வி, எல்லா இடத்தையும் அடைந்தது. தற்போது அதில் எந்த இடைவெளியும் இல்லை.

பல மாநிலங்கள், பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அவற்றை திறந்திருக்கின்றன.

உயர்கல்விக்கு என 22, பள்ளிக்கல்விக்கு என 12 ஆக மொத்தம் 34 கல்வி தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன. டி.வி. வசதி கூட கிட்டாத குழந்தைகளுக்குத்தான் மொகல்லா பள்ளிகள் தொடங்கப்பட்டன. டிஜிட்டல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு வளரக்கூடியது என்பதால்தான் பட்ஜெட்டில் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வரையறுக்கப்படவில்லை. இந்த கல்வி முறைக்காக அரசு ரூ.600 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. இதில் நிதி ஒரு தடையாக இருக்காது.’

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News