செய்திகள்
டிகே சிவக்குமார்

தேவகவுடாவை பிரதமர் பதவியில் அமர்த்தியது காங்கிரஸ் தான்: டி.கே.சிவக்குமார்

Published On 2020-12-10 01:47 GMT   |   Update On 2020-12-10 01:47 GMT
தேவகவுடாவை பிரதமர் பதவியில் அமர்த்தியது காங்கிரஸ் தான் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வாழும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக சட்டப்பூர்வமாக நிதி ஒதுக்கீடு செய்ய புதிய சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலம் அந்த மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இதை ரூ.17 ஆயிரம் கோடியாக குறைத்துவிட்டனர். நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இதை நாங்கள் புரிந்து கொண்டு அதுகுறித்து பேசவில்லை. அது தற்போது ரூ.10 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தலித், பழங்குடியின மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் நலனில் பா.ஜனதா அரசுக்கு அக்கறை இல்லை என்பதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது. சுயமரியாதை இருந்தால் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் மற்றும் சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு ஆகியோர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கோவிந்த் கார்ஜோள் தனது குரலை இழந்துவிட்டார். பா.ஜனதாவின் தலித் விரோத கொள்கையை தடுக்க கோவிந்த் கார்ஜோளால் முடியவில்லை.

கல்யாண-கர்நாடக பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக உள்ளனர். அதனால் அந்த பகுதியின் வளர்ச்சிக்கு அரசு அறிவித்துள்ள ரூ.1,500 கோடியை இதுவரை ஒதுக்கவில்லை. ஏனென்றால் அந்த நிதி ஒதுக்கினால், அதன்மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு நற்பெயர் வந்துவிடும் என்று கருதி அரசு நிதியை ஒதுக்கவில்லை. தேவகவுடாவை பிரதமர் பதவியில் அமர்த்தியதே காங்கிரஸ் தான். குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியதும் இதே காங்கிரஸ் தான்.

இப்போது குமாரசாமி காங்கிரஸ் குறித்து குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். அவருக்கு மாநில மக்கள் பதிலளிப்பார்கள். எடியூரப்பாவை, சித்தராமையா சந்தித்து பேசியது பற்றி எனக்கு தெரியாது. இதுபற்றி நீங்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும். எனக்கு தெரியாத விஷயம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News